Wednesday, 22 February 2012

ஆனாய நாயனார்


சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.
மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.
ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.

அரிவட்டாயர்

நாள் தோறும் சிவபெருமானுக்கு செந்நெல், செங்கீரை, மாவடு ஆகியவற்றை நைவேத்தியமாக அளிக்கும் திருத்தொண்டினை செய்து வந்தார். ஒரு நாள் நைவேத்தியத்திற்காக கோயில் நோக்கி செல்லும் போது பசி மயக்கத்தில் தரையில் சாய்ந்தார். அதனால் நைவேத்தியப் பொருட்கள் தரையில் சிந்தியது, திருத்தொண்டு தடைப்பட்டுப் போனதை எண்ணி வருந்தி தம்முடைய அறுவடை செய்யும் அரிவாளால் வெட்டிக் கொள்ளலானார். சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.

அமர்நீதி நாயனார்


அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.

சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.

இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

Monday, 20 February 2012

அப்பூதியடிகள்


அப்பூதி அடிகள் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும்,

அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.

திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். அப்பூதியடிகள் பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு செல்லுமாறு வேண்டினார். அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரைத் உணவுண்ண வருமாறு அழைத்தார். அவரும் மூத்த மகன் எங்கே என்று வினவி, உண்மை அறிந்து, திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.


"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" - சுந்தரமூர்த்தி நாயனார்

அதிபத்த நாயனார்


சோழ நாட்டின் துறைமுகனான நாகபட்டினம் நகரில் நுழைபாடியிலே பரதவர் வாழ்ந்தனர். அப்பரதவர்களுகுத்து தலைவரரக இருந்தவர் அதிபத்தர். அவர் சிவபெருமானிடத்தே மிகுந்த பக்தியுடையவர். நாள்தோறும் பிடிபடும் மீன்களுள் தலையாய ஒரு மீனை ‘இது நட்டமாடிய நம்பர்க்கு’ என்று கடலில் விடுவது அவர்தம் வழக்கம். ஒரு நாளில் ஒரு மீனே பிடிபடினும் அம்மீனைச் சிவனடிக்கென்று விடுவதை அவர் விடாது செய்து வந்தார். இப்படி அநேக நாள்கள் ஒரு மீனே பிடிபட அவரை வறுமை பீடித்தது. சுற்றத்தவர் உணவின்றி வருந்தினர். அப்பொழுதும் தாம் வருந்தாது தம் பணியினை மகிழ்வோடு செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து நாளெல்லாம் நிகழ் அவரும் பசியால் தளர்ந்தார். ஆயினும் தமது தலைமீன் அளிக்கும் சீலத்தில் தவறாதிருந்தார். இத்தகைய அதிபத்தரின் தலையாய அன்பெனும் ஆரமுதம் அருந்தத் திருவுளம் பற்றினர் ஆலமுண்ட பெருமான்.
ஒரு நாள் ஒரு மீனுக்குப் பதிலாக மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பொன்று பிடிபட்டது. அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட்டார். பொருளை முதலெனக் கொள்ளும் இவ்வுலகிலே பொருட்பற்றை முற்றும் துறந்த அதிபத்தரின் முன் இறைவன் ஆகாயத்திலே தோன்றினார். அதிபத்தர் சிரங்குவித்து வணங்கி நின்றார். அவரைச் சிவலோகத்திற் சிறப்புற்றிருக்கும் வண்ணம் தளைளித்தாண்டார் சிவபெருமான்.

அறுபத்து மூன்று நாயன்மார் பெயர்கள்



1 அதிபத்தர்
2 அப்பூதியடிகள்
3 அமர்நீதி நாயனார்
4 அரிவட்டாயர்
5 ஆனாய நாயனார்
6 இசைஞானியார்
7 இடங்கழி நாயனார்
8 இயற்பகை நாயனார்
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார்
11 எறிபத்த நாயனார்
12 ஏயர்கோன் கலிகாமர்
13 ஏனாதி நாதர்
14 ஐயடிகள் காடவர்கோன்
15 கணநாதர்
16 கணம்புல்லர்
17 கண்ணப்பர்
18 கலிய நாயனார்
19 கழறிற்ற்றிவார்
20 கழற்சிங்கர்
21 காரி நாயனார்
22 காரைக்கால் அம்மையார்
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார்
25 கூற்றுவர்
26 கலிக்கம்ப நாயனார்
27 கோச் செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார்
29 சடைய நாயனார்
30 சண்டேஸ்வர நாயனார்
31 சத்தி நாயனார்
32 சாக்கியர்
33 சிறப்புலி நாயனார்
34 சிறுதொண்டர்
35 சுந்தரமூர்த்தி நாயனார்
36 செருத்துணை நாயனார்
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள்
39 திருக்குறிப்புத் தொண்டர்
40 திருஞானசம்பந்தமூர்த்தி
41 திருநாவுக்கரசர்
42 திருநாளை போவார்
43 திருநீலகண்டர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45 திருநீலநக்க நாயனார்
46 திருமூலர் இடையர்
47 நமிநந்தியடிகள்
48 நரசிங்க முனையர்
49 நின்றசீர் நெடுமாறன்
50 நேச நாயனார்
51 புகழ்சோழன்
52 புகழ்த்துணை நாயனார்
53 பூசலார் அந்தணர்
54 பெருமிழலைக் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார்
57 முருக நாயனார்
58 முனையடுவார் நாயனார்
59 மூர்க்க நாயனார்
60 மூர்த்தி நாயனார்
61 மெய்ப்பொருள் நாயனார்
62 வாயிலார் நாயனார்
63 விறன்மிண்ட நாயனார்